கடந்த 13-ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில், மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்துகளை மீட்டு, பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மதுரை ஆதீன மடத்திற்குச் சொந்தமான சொத்துக்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களைக் கண்டறிந்து, சட்டப்படி உரிய விதிமுறைகளைப் பின்பற்றி ஆதீன மடத்தின் சொத்துகளை மீட்க அறநிலையத்துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுரை ஆதீன மடத்திற்கு வரவேண்டிய நிலுவை, வாடகை மற்றும் குத்தகைப் பாக்கிகளையும் சட்டப்படி வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/athinam_0.jpg)
தமிழகத்திலுள்ள தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் மதுரை ஆதீனம் மிக முக்கியமான ஒன்று. 1500 ஆண்டுகளுக்கு மேலான தொன்மைவாய்ந்த மதுரை ஆதீனத்தை, திருஞானசம்பந்தர் தோற்றுவித்தார். மதுரையை ஆண்ட மன்னன் கூன்பாண்டியன், 1200 ஏக்கர் நிலத்தை மதுரை ஆதீனத்துக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதுதவிர, தஞ்சாவூரிலுள்ள கஞ்சனூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சொத்துக்கள் அதிகமாக உள்ளன. மதுரை ஆதீனத்தின் சொத்து மதிப்பு ரூ.1,300 கோடி இருக்கும் என பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த மடத்திற்குச் சொந்தமாக 100-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. மதுரை முனிச்சாலையில் உள்ள பழைய தினமணி தியேட்டர் ஆதீன மடத்துக்குச் சொந்தமானது. ஆதீன மடத்துக்கு சொந்தமாக சுமார் 100 ஏக்கர் நிலம் அவனியாபுரத்தில் உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே குரண்டியில் சுமார் 650 ஏக்கர் நிலம் ஆதீன மடத்துக்குச் சொந்தமானது. இது தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. திருச்செந்தூர் மற்றும் மேலூரில் தனித்தனி கட்டடங்கள் உள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/athinam2.jpg)
தனியார் ஆக்கிரமித்துள்ள கோயில் சொத்துக்களை மீட்க தொடர்ச்சியாகப் போராடிவரும் வழக்கறிஞர் இராதாகிஷ்ணன், இந்த உத்தரவு குறித்து நம்மிடம், "தமிழகம் முழுவதும் ஆதீன மடங்களின் 1 லட்சம் ஏக்கர் சொத்துக்களை ஆதீன கர்த்தர்களின் தனிப்பட்ட ஆதாயத்திற்காக தனியா ரிடம் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு விற்கவோ, அடகுவைக்கவோ எந்தவித அதிகாரமும் சட்டத்தில் இல்லை. அப்பட்டமாக விதி மீறல் செய்துள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பில் 11-ஆம் பக்கத்தில் சாதாரண மக்கள் ஒவ்வொருவருக்கும் அரசின் சொத்துக்களைப் பாதுகாக்கும் கடமை உள்ளதுபோல்தான், இவர்களுக்கும் உள்ளது. இது இவர்களின் தனிப்பட்ட சொத்தல்ல. அரசின் சொத்து என்று விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை இழந்த சொத்துக்களை மீட்டெடுக்க விரைந்து ஆவன செய்யவேண்டும். இனிமேல் எந்த மடமோ ஆதீனகர்த்தர்களோ சட்டவிரோதமாக தனியார் அபகரிப்பிற்கு துணைபோனால் குற்றவியல் வழக்கு தொடரப் படும். கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்''’என்றார்
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/athinam1.jpg)
இந்த தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன், "வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. தமிழகத்திலுள்ள ஆதீன மடங்கள் மட்டுமல்லாது சங்கர மடங்கள் மற்றும் சிதம்பரம் நடராசர் கோயில் சொத்துக்கள் அனைத்தையும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும். மதுரை ஆதீனம் மட்டுமல்ல, அனைத்து மடங்களின் சொத்துக்களும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும். மானாவாரி யாக இஷ்டத்திற்கு தனிப்பட்ட லாபநோக்கத்தில் பல கோடி வருமானம் வரக்கூடிய கோவிலின் சொத்துக்களை மிகக்குறைந்த விலையில் விற்றுள்ளார்கள். அடமானம் வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் இவர்கள் உழைத்து வாங்கியது அல்ல. மன்னர்களால் தானமாகக் கொடுக்கப் பட்டது.
எப்படி கோயில் சொத் துக்களை அரசு கையகப் படுத்துகிறதோ அதுபோல் இவைகளையும் அரசு கை யகப்படுத்தி பாதுகாக்க வேண்டும்''’என்றார்.
இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து, மதுரை ஆதீனத்தின் செல்பேசியில் தொடர்பு கொண்டோம். மறுமுனையில் "சார் சொல்லுங்க, நான் மதுரை ஆதினமடத்தின் மேனேஜர் பேசுகிறேன்'' என்றார். நாம், "ஆதீன மடத்தின் சொத்துக்களை தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது குறித்து, தற்போதைய ஆதினத்தின் கருத்து குறித்து கேட்கவே தொடர்புகொண்டோம்' என்றதும்... "ஆதீனர்த்தரை தற்போது பார்க்க முடியாது அவர் ஓய்வெடுக்கிறார். தீர்ப்பின் நகல் இன்னும் எங்கள் கைக்கு வரவில்லை. நீதிமன்றத் தீர்ப்பை பற்றி நாங்கள் ஒன்றும் கருத்துச் சொல்ல முடியாது. ஆதீனத்தை கேட்காமல் எதுவும் சொல்ல முடியாது'' என்று முடித்துக்கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/athinam-t.jpg)